சுதந்திர மாதாவே….!
பிறந்தவுடன் அழக்கூட விடாமல்
வாயில் சீனித்தண்ணீரை விட்டு
அடக்கி விடுகிறார்களடிக் கண்ணே !
குப்புறவிழுந்தவுடன் தவழக்கூட விடாமல்
மூலைமுடுக்கில் தலையணை யிட்டு
உட்காரவைத்துச் செல்கிறார்களடிச் செல்லமே !
உருண்டுபுரண்டு முட்டிமோதிநிற்கக்கூட விடாமல்
சக்கரவண்டியில் சுழல விட்டு
சதி செய்கிறார்களடிக் கண்மணியே !
எட்டிஎட்டிசுவர்பிடித்து எட்டுக்கூடவைக்க விடாமல்
நடைவண்டியினைக் கொடுத்து விட்டு
ஓட விடுகிறார்களடிப் பொன்மணியே !
ஓடியாடி விளையாடக்கூட விடாமல்
பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு
பாடம்படிக்கச் சொல்கிறார்களடி வைரமே !
கல்லூரிக்குச்சென்று காதலிக்கக்கூட விடாமல்
பட்டங்களை வாங்கி வந்து
பறக்கவிடச் சொல்கிறார்களடி இரத்தினமே !
கிடைத்தவேலையைச் செய்ய விடாமல்
வீட்டுவேலையைச் செய்யச் சொல்லி
நாள்முழுதும் கட்டாயப்படுத்துகிறார்களடி மாணிக்கமே !
பிடித்தவனை விட்டு விட்டு
சொன்னவனைக் கட்டிக் கிட்டு
வாழச்சொல்லி நச்சரிக்கிறார்களடி முத்தாரமே !
முத்தாகப் பிறந்த குழந்தையினை
மூன்றேமாதம் விட்டு விட்டு
சம்பாதிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார்களடி செங்கரும்பே !
ஆசைப்பட்ட உடையினை வாங்கியுடுத்தவிடாமல்
வாங்கித் தந்த உடையினை
உடுத்தவேண்டு மென்கிறார்களடிக் கட்டழகே !
பெட்டியிலுள்ள நகையினை அணியக்கூடவிடாமல்
பூட்டுபெரிதாகப் போட்டு வைத்தே
வெளியில் செல்கிறார்களடிப் பொன்னாரமே !
விரும்பிச்சமைத்து வேண்டியதை உண்ணக்கூடவிடாமல்
விரும்பியதைக் கேட்டு சமைக்கச்
சொல்லி உண்கிறார்களடிப் பொற்கிளியே !
பிள்ளைகுட்டிகளைக் கரை சேர்த்து
பேரன் பேத்தி வந்தவுடன்
ஓரமொதுக்கிச் செல்கிறார்களடிச் செல்லழகே !
கணவன் விட்டுச் சென்றவுடன்
கண்ணேமணியாக வளர்ந்த பிள்ளைகள்
ஆசையென்ன? தேவையென்ன? விருப்பப்படி
வாழுங்கள் என்றுக்கூறிச் செல்வதில்
நியாயமென்ன? நீதியென்ன? மிச்சமென்ன?
மீதியென்ன? வாழ்க்கைமுழுதும் பறந்துவிட
உன்சுவாசக் காற்றைச் சுவாசிக்க
இன்னுமென்ன வேண்டு மெனச்
சொல்லடி என் தங்கமேத்தங்கம் !!!
Sunday, September 12, 2010
சுதந்திரத்தை சுவாசிக்கும் நேரம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment