சென்றேன்..பெற்றேன்..பகிர்ந்தேன்...!
இயற்கை எழில் சூழ்ந்த
வீரப்பஅய்யனார் கோவிலுக்குச் சென்று வந்தேனே!
களைத்துவரும் பக்தர்களுக்கு அன்னதானம்
படைக்கும் பண்பைக் கண்டு வியந்தேனே!
அகன்றே பரந்து வளர்ந்த
மலைகளின் உயரத்தைப் பார்த்து மகிழ்ந்தேனே!
இனிய குரலில் இசைத்தக்
குயில்களின் இராகந்தனைக் கேட்டு ரசித்தேனே!
மலைகளுக்கிடையே ஓடி வந்த
கொட்டுமருவியின் அழகைக் கண்டு மலைத்தேனே!
ஆற்றைச்சுற்றிப் பூத்துக் குலுங்கும்
செம்பருத்திப்பூக்களின் நறுமணத்தை முகர்ந்து உணர்ந்தேனே!
சிற்றோடையில் கால்களைக் கடித்த
அயிரைமீன்களின் விளையாட்டினை ரசித்து நின்றேனே!
சிறகைவிரித்துப் பறந்து திரிந்த
பட்டுப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்துக் களைத்தேனே!
பகிர்ந்தே உண்ணும் குட்டிகளைச்சுமந்த
தாய்க்குரங்கின் கொஞ்சலைக் கண்டு மகிழ்ந்தேனே!
மணம்மகிழ வாசம் வீசும்
வேர்ப்பலாவின் பழச்சுளைகளை ருசித்து வந்தேனே!
கொத்துக்கொத்தாய்க் காய்த்து இருந்த
புளியமரத்தின் பிஞ்சுகளை உதிர்த்துத் தின்றேனே!
கிளைகளுக்கிடையே தேன்களைச் சேமித்த
தேனீக்களின் கூட்டைக் கண்டு வியந்தேனே!
குழந்தைகள் சூழக் களப்பயணமாம்
அல்லிநகரம் மலைக்கோவில் சென்று வந்தேனே!
குதூகலமாய் கலந்து கொண்ட
மழலைகளின் முகப்பொலிவைக் கண்டு மகிழ்ந்தேனே!
வேண்டும் வரம்தரும் அருள்மிகு
வீரப்ப அய்யனாரின் தரிசனமும் பெற்றுவந்தேனே!
தோழனின் துயர் தீர்ந்திட வேண்டி
நந்தியின் காதில் ஓதியும் வந்தேனே!
Sunday, February 27, 2011
Subscribe to:
Posts (Atom)