Sunday, July 10, 2011

காதல்!

காதல்!

என் செல்லமே! எம் தலைவனே!

உம் காந்த விழிகள் காண நாணி
எம் கயல் விழிகள் புவி பார்க்கிறதே!

உம் கொஞ்சு மொழிகள் கேட்டு மயங்கி
எம் செவி இரண்டில் தேன் பாய்கிறதே!

உம் மென் கரங்கள் பட்டு வெட்கி
எம் பொன் மேனியில் மின்னல் பாய்கிறதே!

உம் மயிர் செறிந்த கால்கள் பின்னி
எம் பாத கமலங்கள் வெண் பஞ்சாகிறதே!

உம் இதழோடு இதழ் சேர்ந்து உரையாடி
எம் இதழ்கள் நும் கவி பாடுகிறதே!

உம் மனத்தோடு மனம் ஒன்றி கலந்த
எம் இதய நாளங்கள் களி நடனமாடுகிறதே!

எம் கரங்கள் உனை மூடிய இரவில்
நும் கரங்கள் மீட்டிய சுகமதில் மயங்கி

சூரியக் கதிர்கள் கண்டும் நான் எனை
இழந்து இதழ் விரிக்க மறந்த வேளைதனில்

பொன்வண்டே! என்கண்ணே! உன் ரீங்கார இசையில்
விரிந்த தாமரைப்பூவாம் எமை நீ அணைக்க

அடுத்த நாள் இரவுப் பொழுதிற்காகக் காத்திருக்கும்
உமது விழிகளில் தோன்றிய அற்புதமல்லவோ காதல்!

Sunday, March 27, 2011

அன்பே....!

அன்பே....!
என் ஆருயிரே...!

சூரியனை ரசித்தேன்....
சுட்டு எரித்தது....!
சந்திரனை ரசித்தேன்...
தேய்ந்து போனது...!
மின்னலை ரசித்தேன்...
மறைந்து போனது...!
மலையை ரசித்தேன்...
மடுவாக மாறியது...!
வானத்தை ரசித்தேன்....
வெறிசசோடிப் போனது...!
கடலலையை ரசித்தேன்...
சுனாமியாய் பொங்கியது...!
இடியை ரசித்தேன்...
தொலைந்து போனது...!
காற்றை ரசித்தேன்...
கரைந்து போனது...!
மேகத்தை ரசித்தேன்....
சிதைந்து போனது....!
புயலை ரசித்தேன்....
சூறாவளியாய் மாறியது..!
பூக்களை ரசித்தேன்..
வாடிப் போனது..!
பறவைகளை ரசித்தேன்..
பறந்தே சென்றது...!
என்னவனே...
உன் புன்னகையை ரசித்தேன்
உலகம் சொர்க்கமாக மாறியது...!

Thursday, March 3, 2011

தேடினேன்...தேடினேன்..தேடினேன்

என் ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...

என் அன்புக்குரியோனைத் தேடினேன்....

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்

என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...

என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..

என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..

என் பண்புக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...

என் உயிருக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...

என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...

என் காதலுக்குரியோனைத் தேடினேன்..

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...

என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..

என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....

எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்

என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி

என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....

Sunday, February 27, 2011

சென்றேன்..பெற்றேன்..பகிர்ந்தேன்...!

சென்றேன்..பெற்றேன்..பகிர்ந்தேன்...!

இயற்கை எழில் சூழ்ந்த‌
வீரப்பஅய்யனார் கோவிலுக்குச் சென்று வந்தேனே!
களைத்துவரும் பக்தர்களுக்கு அன்னதானம்
படைக்கும் பண்பைக் கண்டு வியந்தேனே!

அகன்றே பரந்து வளர்ந்த‌
மலைகளின் உயரத்தைப் பார்த்து மகிழ்ந்தேனே!
இனிய குரலில் இசைத்தக்
குயில்களின் இராகந்தனைக் கேட்டு ரசித்தேனே!

மலைகளுக்கிடையே ஓடி வந்த‌
கொட்டுமருவியின் அழகைக் கண்டு மலைத்தேனே!
ஆற்றைச்சுற்றிப் பூத்துக் குலுங்கும்
செம்பருத்திப்பூக்களின் நறுமணத்தை முகர்ந்து உணர்ந்தேனே!

சிற்றோடையில் கால்களைக் கடித்த‌
அயிரைமீன்களின் விளையாட்டினை ரசித்து நின்றேனே!
சிறகைவிரித்துப் பறந்து திரிந்த‌
பட்டுப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்துக் களைத்தேனே!

பகிர்ந்தே உண்ணும் குட்டிகளைச்சுமந்த‌
தாய்க்குரங்கின் கொஞ்சலைக் கண்டு மகிழ்ந்தேனே!
மணம்மகிழ வாசம் வீசும்
வேர்ப்பலாவின் பழச்சுளைகளை ருசித்து வந்தேனே!

கொத்துக்கொத்தாய்க் காய்த்து இருந்த‌
புளியமரத்தின் பிஞ்சுகளை உதிர்த்துத் தின்றேனே!
கிளைகளுக்கிடையே தேன்களைச் சேமித்த‌
தேனீக்களின் கூட்டைக் கண்டு வியந்தேனே!

குழந்தைகள் சூழக் களப்பயணமாம்
அல்லிநகரம் மலைக்கோவில் சென்று வந்தேனே!
குதூகலமாய் கலந்து கொண்ட‌
மழலைகளின் முகப்பொலிவைக் கண்டு மகிழ்ந்தேனே!

வேண்டும் வரம்தரும் அருள்மிகு
வீரப்ப அய்யனாரின் தரிசனமும் பெற்றுவந்தேனே!
தோழனின் துயர் தீர்ந்திட வேண்டி
நந்தியின் காதில் ஓதியும் வந்தேனே!

Wednesday, January 26, 2011

தாயே...!

பத்துப்
பாத்திரம்
தேய்த்து
மழலை
என்னை
படிக்க
வைத்து
பந்தம்
மெச்ச
மணமுடித்து
பார்போற்ற
வாழவைக்க
இராப்பகலாய்
விழித்திருந்து
உழைத்துக்
களைத்துச்
சோர்வடைந்து
உள்ளம்
முழுதும்
உயர்வு
கொண்டு
நீ
படும்
துயர்
கண்டு
பரந்து
விரிந்த
இப்பிரபஞ்சத்தில்
வஞ்சனையால்
நிந்திக்கப்பட்ட
ஓர்
அபலைக்கு
மகளாய்
பிறந்த
அவலத்தை
நினைத்து
இரணமாகப்
பெருத்து
பாரமாகக்
கனத்த
என் இருதயம்
நந்தவனப்
பூஞ்சோலையாக
மாறிப்
பூக்களாக
மலர்கிறதே
கள்ளிப்
பாலூட்டிக்
கொல்லாமல்
தன்னம்பிக்கைப்
பாலூட்டி
வளர்த்தத்
தாயே
உந்தன்
கருணை
கண்டு........!!!

[இக்குடியரசு நன்னாளில் தன்னம்பிக்கை வளர்க்கக் கோரும்.........

நமது தேசம்!

நமது தேசம்!

ஆரியர்கள் நாடி வந்த
வளமையான தேசமது நமதுதேசமே!
அலெக்ஸாண்டர் தேடி வந்த
வீரமிகுந்த தேசமது நமதுதேசமே!
சிந்துவெளி நாகரீகம் தந்த
நாகரீக தேசமது நமதுதேசமே!
புத்தர்பிறந்து ஞானம் பெற்ற
அறிவு தேசமது நமதுதேசமே!
போரைவெறுத்து அசோகர் கண்ட
அமைதி தேசமது நமதுதேசமே!
நான்குவேதம், கீதை சொன்ன
நீதி தேசமது நமதுதேசமே!
இராமயணத்துடன் பாரதமும் தந்த
இதிகாச தேசமது நமதுதேசமே!
ஆரியபட்டர் ,பாஸ்கரா கண்ட
கல்வி தேசமது நமதுதேசமே!
அந்நியரின் இருநூறாண்டு ஆட்சியிலே
கலையிழந்த தேசமது நமதுதேசமே!
ஆங்கிலேயரையெதிர்த்து வெற்றி கண்ட
விடுதலை தேசமது நமதுதேசமே!
முழுமையான அங்கீகாரம் பெற்ற
குடியரசு தேசமது நமதுதேசமே!
ஆதலினால் அறிவியலில் முன்னேற்றம் கண்ட
விஞ்ஞான தேசமது நமதுதேசமே!
மாதம் மும்மாரி காண்கின்ற
மழை தேசமது நமதுதேசமே!
வயல்வெளியும் ஆறுகளும் பெற்ற
வளமையான தேசமது நமதுதேசமே!
இருந்தபோதிலும் வேளாண்புரட்சி வளர்ச்சியிலே
வளம்குறைந்த தேசமதுவும் நமதுதேசமே!
நன்னீரை நச்சாக்கிக் கண்ணீரை
மிச்சமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
ஆலைக்கழிவை ஆற்றில் கலந்து
அசுத்தமாக்கும் தேசமதுவும் நமதுதேசமே!
இக்குடியரசு நன்னாளில்
மரங்களை வளர்த்து
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி
ஆறுகளை இணைத்து
அணைகள் பலகட்டி
பாலீதீன்களைத் தவிர்த்து
வளங்கள்யாவும் காத்திட
வேளாண்மை பெருகிட
உலகதரத்தில் உயர்ந்திட
விழிப்புணர்வைப் பெறவேண்டிய
தேசமதுவும் நமதுதேசமே!!!
இனிய குடியரசுதின நல்வாழ்த்துகள்!

Friday, January 14, 2011

பொங்கல்

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

தலைவாசலில் காப்புக் கட்டிட இருபுறமும் செங்கரும்பு நிறுத்திட‌
பசுஞ்சாணந்தெளித்துக் கோலம் வரைந்திட ஊரெங்கும் மகிழ்ச்சிவெள்ளம் பெருகிட‌
தைத் திங்களை வரவேற்கிறேன்! தமிழ்ப் புத்தாண்டினைக் கொண்டாடுகிறேன்!
லலலா லலல லல லலலா

தேனைப் போல் இனிக்கும் செங்கரும்பு அதன் அடியும்
சிறு மழலைகள் இதழில் அறு சுவைதந்து மகிழும்[தேனைப்]
ஹா ஹா ஹா ஹா

பச்சரிசியும் புதுவெல்ல‌மும் கலந்திடப் பொங்கிடும் மணப் பொங்கல்!
முந்திரியும் பசுநெய்யும் கலந்திட வாசனைதந்திடும் தைப் பொங்கல்!
புதுமண் பானையில் வைத்திடும் பொங்கல்
தித்திக்கும் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
திருநாளன்றோ என்றும் பொன்னாளன்றோ!
[தலைவாசலில்]

தேங்காய் ரெண்டு உடைத்து வாழைப்பழம் தட்டில் படைத்து
வெற்றிலைபாக்கும் கொஞ்சம் வைத்து பூ மஞ்சள்கட்டி வணங்கிட[தேங்காய்]
ஹா ஹா ஹா ஹா

கதிரவன் உதிக்கையில் வண்ணக் கோலத்தில் வைத்திடும் பொங்கல்!
புதுவழியது தோன்றிடும் நல்வழியது காட்டிடும் வாழ்க்கையில் என்றும்!
மங்கையர் குலவையில் ஒலித்திடும் ஓசையில்
பொங்கிடும் பொங்கல் பொங்கலோப் பொங்கல்
மணப்பொங்கலே!தைப்பொங்கலே!
[தலைவாசலில்]