பொன்னான பூமி…!
தமிழகக் கேரள பொது எல்லையாம்
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் சென்று மகிழ்ந்தேனே !
தொலைவில் இருந்து பாடி மகிழும்
சோலைக் குயிலின் கீதம் இரசித்தேனே !
கார்மேகங் கண்டு களிப்புற்றே ஆடும்
வண்ண மயிலின் அழகைக் கண்டேனே !
தென்றலாய் வந்து தேனாய் இசைத்திடும்
தென்மேற்குக் காற்றின் இனிமை கண்டேனே !
செக்கச் சிவந்த இரும்புச் சோளம்
இதழ் விரித்துச் சிரிக்கக் கண்டேனே !
நிலத்தில் மறைந்து விளையும் பயிராம்
நிலக்கடலைச் செடியின் அழகைப் பார்த்தேனே !
கானகமெங்கும் சிறகையடித்துப் பறந்தே திரியும்
பச்சைக் கிளியின் மொழியைக் கேட்டேனே !
துள்ளித் திரிந்து ஓடிச் செல்லும்
புள்ளிமானின் விழிகள் கண்டு வியப்படைந்தேனே !
பசுமைக் கொழிக்கும் மரங்கள் அடர்ந்த
வனத்தைக் கண்டுப் புதுமை பெற்றேனே !
பருவத்தேப் பொழிந்திடும் சாரலைக் கண்டு
பணிந்தே செல்லும் ஓடையைக் கண்டேனே !
உலகமெல்லாம் ஏற்றுமதியாகும் வாசம் மிகுந்த
மலை ஏலக்காயின் நறுமணம் உணர்ந்தேனே !
சில்லெனப் பூத்து சிகப்பாய் விளைந்த
பன்னீர்க் கொய்யாப் பறித்து வந்தேனே !
உயரத்தில் காய்த்த கொடிக்கா மரத்தின்
பழத்தைத் தின்று ருசித்து வந்தேனே !
பெற்றவர் மகிழ்ந்திட பிறந்த ஊராம்
பொன்னான பூமி சென்று வந்தேனே !!!
No comments:
Post a Comment