Sunday, September 12, 2010

சுதந்திரம் !

தேவியே...


தாயின் தாலாட்டில்
தூளியிலேக் கண்ணுயர்ந்து

வானத்திலே ஒளிவீசும்
நிலாப்பார்த்து அமுதுண்டு

மாக்கோலமிட்ட வாசலில்
அழகழகாய் கிறுக்கலிட்டு

வண்ணக் கரும்பலகையில்
முத்துமுத்தாய் எழுத்துக்களிட்டு

தோழர்களுடன் ஆடிப்பாடிக்
கண்ணாமூச்சி விளையாடிட்டு

தெருவில் விற்போரின்
குரலுக்கு மறுமொழியிட்டு

வேலியிலே ஓடிடும்
ஓணானைக் கல்லாலடித்து

காட்டோரம் பெருகியோடும்
ஆற்றினிலேக் குளியலிட்டு

சாலையிலே வளர்ந்திருக்கும்
பூக்களைப் பறித்திட்டு

பூஞ்சோலையிலேப் பறந்திடும்
பட்டாம்பூச்சியினைத் துரத்திட்டு

வீட்டருகேக் குரைத்திடும்
தெருநாயினை விரட்டிட்டு

பருவத்திலே மழைபொழியும்
மழைநீரிலேக் கப்பலிட்டு

அடுத்தவர்வீட்டுக் கண்ணாடி
ஜன்னலினைப் பந்தாலுடைத்திட்டு

படிப்பினைக் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியருக்குப் பட்டப்பெயரிட்டு

உடன்பயிலும் சிறுமிகளின்
ஜடைரிப்பனை அவிழ்த்துவிட்டு

கடைவீதிக்குச் செல்கிறேனென
நண்பர்களுடன் அரட்டையடித்திட்டு

திரைப்படம் போவதாகச்சென்றுக்
குமரிகளைக் கிண்டலடித்து

அனுபவித்துப் பறந்துசென்ற சுதந்திரத்தைத்
திரும்பப்பெறுங் காலமெதுவோ அதுவே

மெய்யான சுதந்திரத்திருநா ளென்பதனை
யான் அறிந்திலேன்? பகர்ந்திடுக !

No comments:

Post a Comment