இப்பூமியில் தோன்றிடும்
பச்சிளங் குழந்தைகளை
அணைத்துத் தாலாட்ட உதவுவதும் நாங்களே!
பிஞ்சு மழலைகளை
தாலாட்டுடன் விட்டுவிடாமல்
நடைவண்டிகொடுத்து நடக்க உதவுவதும் நாங்களே!
நடந்து பழகிய
நல்முத்துச் சரங்களுக்கு
விளையாட்டுச்செப்புகள் தந்து உதவுவதும் நாங்களே!
விளையாட்டில் ஓடியாடி
மகிழ்ந்த அன்புமணிகளுக்கு
வெயில் தணிக்க
நிழல் கொடுத்து உதவுவதும் நாங்களே!
நிழலின் அருமையில்
படித்துப் பட்டம்பெற்ற
பாசமுள்ளப் பாமரனுக்கு
பார்புகழ அமர்ந்திட
நாற்காலி தந்து உதவுவதும் நாங்களே!
அலுத்துக் களைத்துவரும்
நாயகர்கள் நாயகியைக்
கைபிடிக்க வாசம் பொதிந்த
சந்தனமாலை தந்து உதவுவதும் நாங்களே!
கரம்பிடித்தவளைக் களிப்புடன்
இன்புற்று மகிழ
தேக்குக்கட்டில் தந்து உதவுவதும் நாங்களே!
இனியிருந்தாகப் போவதெதுவுமில்லை
என்பதைமறைந்த உம்மை
நல்லடக்கம் செய்திட
பாடை தந்து உதவுவதும் நாங்களே!
பூச்சிபுழுக்கள் அரித்திடாமல்
பாடையில் கிடத்தியிருக்கும்
உயிரற்ற உடலும்மை
எரித்திட சுடலை
விறகு தந்து உதவுவதும் நாங்களே!
ஓ! மனிதரே!
பிறந்தது முதல்
இறுதி வரை
இருந்த
ஒவ்வொரு
வாழ்க்கைப்படியிலும்
உதவிடும்
எங்களை
மடியச் செய்விக்கும் நீவீர்
உம்
ஒவ்வொரு
வாழ்க்கைப்படியிலும்
எங்களுள்
ஒன்றினை[ஒரு மரக் கன்றினை]
நட்டு
உலகமதை உயர்த்தி
உயர்வினை அடைய
உங்களை வாழ்த்திப்
பிறக்கப் போகும்
புத்தாண்டை வரவேற்கும்
போதிமரங்கள் நாங்கள்!!!
Monday, January 3, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment