Sunday, November 14, 2010

ரோஜாவின் ராஜா!

ரோஜாவின் ராஜா…..!


படம்

அலகாபாத்தில் உதித்த அற்புதமே!
மோதிலால் தந்திட்ட மோதகமே!
சொரூபராணி பெற்றிட்ட சொல்லோவியமே!
இரத்தினமெனப் பெயருள்ளடக்கிய நவரத்தினமே!

ஆங்கிலத்தாதி வளர்த்திட்ட அலங்காரமே!
மொழிகள்பல கற்றிட்ட புலமையே!
பீபியம்மை உருவாக்கிய ஞானசீலமே!
குதிரைச்சவாரியில் ஆசைகொண்ட குழந்தைமனமே!

அரபுக்கதைகள் கேட்டுமகிழ்ந்த கதைக்களஞ்சியமே!
அளவோடுபுசித்து வளமோடுவாழ்ந்த ஆரோக்கியமே!
இல்லையென்றோர்க்கு அள்ளிவழங்கிய வள்ளலே!
விடுதலைவேட்கையை வேரூன்றிய வித்தகமே!

குழந்தைகள்தினம் கொண்டாடவைத்தக் குலவிளக்கே!
ஆனந்தபவனில் அரசாண்ட கலையழகே!
இலண்டனில் கல்விபயின்ற இலக்கியமே!
பெர்டினண்டிப்ரூக்ஸை ஆசிரியராகப்பெற்ற பிரம்மஞானமே!

புத்தகங்களில் ஆர்வமுள்ளப் புகழோனே!
ஆன்மீகநெறிகள் போதிக்கப்பெற்ற ஆனந்தமே!
பதினைந்தாம்வயதில் கப்பலில்பயணித்த உல்லாசமே!
ஹாரோகல்லூரியில் கல்விபயின்ற பொற்றாமரையே!

புதுமைச்செய்திகளில் மகிழ்ந்த புதுமையே!
கேம்பிரிட்ஜில் தத்துவம்பயின்ற தத்துவமே!
பாரிஸ்டர் பட்டம்பெற்ற பெட்டகமே!
தந்தைக்காக அமைதிகாத்திட்ட சமாதானமே!

ரௌலட்சட்டத்தை எதிர்த்தப் பண்பாளனே!
பளிங்குச்சிலை கமலாவைமணந்த பொன்னாரமே!
அறப்போரில் பங்குபெற்ற அறக்காவலனே!
அண்ணலுக்காகத் தந்தையைச்சந்தித்தத் தங்கமே!

தந்தையுடன் சிறையிலிருந்த சரித்திரமே!
பூரணசுதந்திரம் கிடைத்திடவேண்டிய இலட்சியமே!
தண்டியாத்திரையில் தந்தையுடன்கலந்திட்ட தைரியமே!
பஞ்சசீலக்கொள்கையை உருவாக்கிய சாணக்கியமே!

ஐந்தாண்டுத்திட்டங்களைக் கொணர்ந்த ஆசியஜோதியே!
டிஸ்கவரிஆஃப் இந்தியாஎழுதிய எழுத்தாளனே!
சுதந்திர இந்தியாவின்முதல் தலைவனே!
வரிகொடாஇயக்கம் ஏற்படுத்திய அன்புள்ளமே!

அன்னைஇந்திராவை உலகுக்குநல்கிய நல்லுள்ளமே!
மகத்தானபணிகள் செய்திட்ட மனிதருள்மாணிக்கமே!
குழந்தைகளால்மாமா என்றழைக்கப்பட்ட மாமணியே!
மழலைகளின்மனதில் மலர்ந்திட்ட ரோஜாவின்ராஜாவே!

என்றும் உன்புகழ்பாடி மகிழ்ந்திடவே _ நித்தம்
உந்தன் பூக்கள்பூக்கின்றதே இம்மண்ணினிலே!


படம்

No comments:

Post a Comment